லம்போர்கினி நிறுவனத்தின் அடுத்த படைப்பான புதிய ஹூராகேன் எஸ்டிஓ கார் அறிமுகமாகியுள்ளது.
உலகளவில் பிரபலமான லம்போர்கினி கார் நிறுவனம் தனது புதிய முயற்சியாக ரேஸ் காரின் வடிவத்தையும், வேகத்தையும் கொண்ட லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரின் 75 சதவீத பாடி, கார்பன்-ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சூப்பர் காரில், எடை குறைவான டைட்டானியம் ரோல்-பார்கள், 4-பாயிண்ட் சீட் பெல்ட்டுடன் கார்பன்-ஃபைபர் பக்கெட் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவான இந்தக் காரில் 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 565 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
மேலும், இந்தக் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3 வினாடிகளிலும், 0 டூ 200 கிலோ மீட்டர் வேகத்தை 9 விநாடியிலும் எட்டிவிடும். அதே நேரத்தில் ஹூராகேன் எஸ்டிஓ கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. மூன்று வகையான டைரவிங் மோடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கார் வரும் 2021 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரின் விற்பனை விலை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.