கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளை தற்போது மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா கார் நிறுவனம் தனது விற்பனையை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதனால் அடுக்கடுக்காக புதிய கார்களை இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தவுள்ளது.
அந்தவகையில், மஹிந்திரா தார் புதுப் பொலிவுடன் எல்.எக்ஸ். மற்றும் ஏ.எக்ஸ். என இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது. இது இரண்டு என்ஜின் மாடல்களைக்கொண்டது. 2 லிட்டர் எம் ஸ்டாலியன் டி.ஜி.டி.ஐ. பெட்ரோல் மாடலும், 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜினும் கொண்டதாக இது அறிமுகமாகிறது. பெட்ரோல் மாடல் 150 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையைக் கொண்டது. டீசல் மாடல் 130 பி.ஹெச்.பி. திறன் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 6 கியர்களுடன் மானுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது நான்கு சக்கர சுழற்சி கொண்டது. 17.8 செ.மீ. தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி உள்ளது. ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளது. பாதுகாப்பு வசதிக்காக இரட்டை ஏர் பேக்குகள் உள்ளன. மேற்கூரை தார்பாய் வசதி மற்றும் உறுதியான உலோக மேற்கூரை வசதி கொண்டது. இரட்டை வண்ண பம்பர்கள் உள்ளன. இதில் அலாய் சக்கரம், பகலில் ஒளிரும் எல்.இ.டி. டி.ஆர்.எல்., அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான முன் இருக்கைகள், டயர் ட்ரானிக்ஸ் மற்றும் டயர் சுழற்சி கண்காணிப்பான், சாகச பயண விவரங்கள், எலெக்ட்ரானிக் சுவிட்சுகள், பிரேக் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் கொண்டது.
புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மஹிந்திரா தார் எல்.எக்ஸ். மற்றும் ஏ.எக்ஸ். என மாடல்கள் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியன்று அறிமுகமாகிறது.