தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக அவர் திரைப்படம் வெளியானால் அதை ஒரு திருவிழா போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவர்.
இதற்கிடையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஆன்லைன் கேம் ஷோ நடத்தவுள்ளனர். விஜய்யின் ரசிகர்களுக்காக நடத்தப்படவுள்ள இந்நிகழ்ச்சி வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது.
இந்த ஷோவில் விஜய் நடித்த திரைப்படங்கள், அவரது விருப்பங்கள், பார்வைகள், பேச்சுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்பட உள்ளன. மொத்தம் 20 எபிசோடுகள் கொண்ட இதில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்றும் நடத்தப்படவுள்ளது.
அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பங்கேற்கும் விதமாக பிரபல யூடியூப் சேனல்களான வலைப் பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியவற்றில் இந்த கேம் ஷோ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஒவ்வொரு எபிசோடிலும் தொகுப்பாளர் பத்து கேள்விகளைக் கேட்பார். போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் முடிவில் அந்தக் கேள்விகளுக்கான பதிலை திரையில் தோன்றும் ஒரு வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அனுப்ப வேண்டும். நிகழ்ச்சியின் முடிவில் 10 கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும், அதன் பிறகு அந்த நம்பருக்குப் பதிலை அனுப்ப முடியாது.
ஒவ்வொரு எபிசோடிலும் வெற்றிபெறுபவர்கள் காலிறுதி, அரையிறுதியைத் தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நபர் ஒரேயொரு பதில் பதிவு மட்டுமே அனுப்ப இயலும், ஒரு நபர் பல பதிவுகளை அனுப்பினால் அனைத்து பதில்களும் நிராகரிக்கப்படும். இறுதியாக இதில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக பஜாஜ் பல்சர் 150 உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகர் ட்ரோஃபி வழங்கப்படும்.
இரண்டாவது பரிசாக 8 கிராம் தங்க காசும், ‘மாஸ்டர்’ படத்துக்கான டிக்கெட்டுகள் ஐந்தும், மூன்றாவது பரிசாக 4 கிராம் தங்க காசும், ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.