உப்பை கரைக்கும் நீர் போல் மனதின் பாரத்தை கரைக்கும் இசைகளில் பிரதானமானவை இளையராஜா பாடல்கள். எந்த வித எண்ணத்தையும் ஒரு விநாடியில் மாற்றி வேறு உலகத்திற்கு கடத்தி செல்லும் புகழ் இவரது இசைக்கு உண்டு. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இவர் இசை அமைத்தது போல் ஒரு பாடல் வேண்டும் என இயக்குநர் சுட்டிக்காட்டும் இரண்டு இசையமைப்பாளர்களில் இவர் முதன்மை.
இசையை போலவே இவரது பேச்சிலும் எப்போதும் தென்றலும் புயலும் கலந்தே வீசும். தன்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு கரார் பதிலை அளிப்பார். அந்த பதில் உண்மையாக இருக்கும். ஒரு முறை செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு ஏதாவது கெட்டப் பழக்கம் இருக்கா என கேள்வி கேட்டார். அதற்கு இளையராஜா எதை நல்லப் பழக்கம் எதை கெட்டப் பழக்கம் என நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது. எனக்கு பிடித்தது எல்லாம் செய்வேன் அது எல்லாம் நல்லப் பழக்கம் தான் பதிலளித்தார்.
இவரது பாடல்கள் பல்வேறு மனநலம் சார்ந்த விஷயங்களுக்கு வைத்தியமாகவே இருந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. தமிழ் இசை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இளையராஜா தனக்கென ஒரு சொந்த ஸ்டுடியோவை இப்போதுதான் அமைக்கப்போகிறார் என்றால் நம்ப முடிகிறதா.
இளையராஜா தனது பாடல்களை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார், இளையராஜா இந்த ஸ்டுடியோவிலிருந்து ஏணைய ஹிட் பாடல்களை இசைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜா ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு திரையுலகினர் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட் வட்டாரம் திரண்டது. இருப்பினும் இளையராஜாவுக்கு இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஸ்டுடியோவில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.
இதையடுத்து இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றுவதற்காக வாங்கி இருக்கிறார். மேலும் இந்த ஸ்டுடியோவுக்கு ராஜா ஸ்டுடியோ என்று பெயரிடப்பட இருப்பதாகவும் ராஜா ஸ்டுடியோ செப்டம்பரில் திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.