தமிழக மக்களால் செல்லமாக ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அவருக்கான அந்தஸ்தை திரைத்துறையில் தனித்து நின்று உருவாக்கியிருக்கிறார். சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது சிறந்த நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார்.
இவர் அண்மையில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை எதிர்நோக்கி தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமல்லாது இவர் நடித்திருக்கும் லாபம், துக்ளக், தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட படங்களும் தயாரிப்பு நிலையில் உள்ளது.
இந்நிலையில் இவர் இயக்குநர் விஜய் இயக்கத்தில் தற்போது ஒரு படம் நடிக்க உள்ளார். இயக்குநர் விஜயின் ‘தலைவி’ திரைப்படத்திற்கு பின் இந்த படம் இயக்கப்பட உள்ளது. இதனை வெல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் இஷாரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இதில் முதல் முறையாக அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து நடிக்கிறார் விஜய்சேதுபதி.
விஜய்யின் இயக்கத்தில் ‘தெய்வத் திருமகள்’ மற்றும் ‘தாண்டவம்’ ஆகிய படங்களில் மிகவும் அழகாக நடித்திருப்பார். விஜய்யுடன் அனுஷ்காவிற்கு இது மூன்றாவது படம். விஜய் சேதுபதியும் இயக்குநர் விஜய் மற்றும் இஷாரி கணேஷுடன் முதல் முறையாக பணியாற்றுகிறார்.
அனுஷ்கா ஷெட்டி கடைசியாக தமிழில் நடித்த படம் ‘பாகமதி’ . அவர் அடுத்ததாக நடிகர் மாதவனுடன் ‘சைலன்ஸ்’ எனும் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது