ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் டொரன்டோ தமிழ் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
தமிழில் வெளியான அந்தலாஜி ( ஒரே திரைப்படத்திற்குள்வெவ்வேறு கதைகள்) திரைப்படங்களில் சில்லுக்கருப்பட்டி திரைப்படமும் முக்கியமானது. சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீனா சாம்சன், சாரா அர்ஜுன், ராகுல் உள்ளிட்டோர் நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. நடிகர் சூர்யாவின் 2டி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது.
நான்கு வெவ்வேறு வயது கொண்டவர்களின் காதல் கதையை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் ஷங்கர் பாரதிராஜா ஆகியோரது பாராட்டுக்களை பெற்ற இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் பரிந்துரைக்கப்பட்டு விருதுகளை அள்ளியது.
அந்த வகையில் டொரன்டோ தமிழ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்கள் சில்லுக்கருப்பட்டி திரைப்படமும் கன்னிமாடம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் பங்கேற்றன. இதில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் வெற்றி பெற்று டொரன்டோ தமிழ் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. இத்தகவலை இயக்குநர் ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது பதிவில் இதுபோன்ற விழாக்களில் இந்த மாதிரியான செய்திகள் வெளிவருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக பதிவிட்டிருந்தார்.
இத்திரைப்படம் நாளை ( செப்டம்பர் 12) டொரன்டோ தமிழ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.