சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தையடுத்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான சதக் 2 திரைப்படம் நேகடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.
தமிழில் இயக்குனர் வசந்த் பிரசாந்த் தேவயானி பிரகாஷ்ராஜ் ஆகியோரை வைத்து எடுத்த படம் தான் அப்பு. இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்தான் சதக். 1991இல் மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் தத் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் 29 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படத்தை மகேஷ் பட் இயக்க அவரது சகோதரர் முகேஷ் பட் தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த சஞ்சய் தத்துடன் இதில் மகேஷ் பட்டின் ஆலியா பட், ஆஷிக்கி 2 புகழ் அதித்ய ராய் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் டிரெய்லர் முதல் விமர்சனம் வரை அதிக நேகடிவ் கமெண்ட்ஸ்களை சந்தித்தது.
சரி நாம் கதைக்கு வருவோம். தாயை இழந்த 21 வயது பெண் ஆர்யா (ஆலியா பட்) தனது தந்தை போலி சாமியார் மீது அதீத நம்பிக்கை உடன் இருக்கிறார். ஒரு சாமியாரின் சாம்ராஜ்யத்துக்கே வில்லியாக இருக்கும் ஆர்யாவை சொத்துக்காக தீர்த்துக் கட்ட அவரது தந்தை முடிவு செய்கிறார். இதனால் தனது காதலன் விஷால் (அதித்ய ராய் கபூர்) உடன் ரானிகேட்டிற்கு செல்ல திட்டமிடுகிறாள்.
அதேசமயம் மனைவியை விபத்தில் பறிகொடுத்த டிராவல்ஸ் கம்பெனி முதலாளி ரவி கிஷோர் (சஞ்சய் தத்), தற்கொலை செய்யும் எண்ணத்துடன் திரிய ஆர்யாவை சந்திக்கிறார். அவரின் கடைசி சவாரியாக வந்து ஆர்யாவும் விஷாலும் வந்த சேர அவர்களுடன் போலி சாமியார், உறவுகளின் துரோகம், காதல், சென்டிமென்ட் எனப் பல திசைகளில் பயணிக்கிறது கதை. மரணத்தைத் துரத்தும் ரவி கிஷோர், அந்த மரணமே துரத்தும் ஆர்யாவைக் காப்பாற்றுகிறாரா என்பதே ஒன்லைன்.
நட்சத்திர பட்டாளங்களுடன் பயணித்தாலும் ரசிகர்கள் யாரும் படத்துடன் பயணிக்கவில்லை. அவர்கள் டாக்ஸியில் செல்கிறார்களா அல்லது சைக்கிளில் செல்கிறார்களா எனத் தெரியவில்லை. அந்த அளவிற்கு படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்கிறது.
அதைவிட வீக்கான வசனங்கள், இசை என படம் பார்க்கும் போதே தூக்கம் வந்துவிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மகேஷ் பட்டின் கார் பஞ்சரானாது தான் மிச்சம். 90,80,70 களில் வெளியாக வேண்டிய படம் தற்போது வெளியானதே அதற்கு காரணம். முழுக்க அவுட் டேட்டட் ஸ்கிரிப்ட் பிளஸ் மேக்கிங்.
ஆலியா பட், சஞ்சய் தத், அதித்ய ராய் கபூர் அனைவரும் நடிப்பில் ஓவர் டோஸ் காட்டியுள்ளனர். படம் பார்த்த விமர்கர்கள் அனைவருமே இது ஒரு ‘குப்பைப்படம்’ என்றே விமர்சனம் செய்துள்ளனர். படத்தைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றெல்லாம் எழுதி வருகிறார்கள்.
தூக்கம் வராமல் அவதிபடும் இன்சோம்னியா வாசிகளுக்கும் இந்த படத்தை பார்த்தால் முதல் பாதியிலேயே தூங்கி விடுவார்கள்.