சூர்யாவின் 38-வது படமாக சூரரை போற்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக உள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் இசைவெளியீட்டு கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இந்த கதை உண்மை சம்வத்தை தழுவியது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படமானது ஜி ஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை கதையாகும். இவர் ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை உருவாக்கியவர். கர்நாடகாவில் கோரூர் கிராமத்தில் பிறந்த கோபிநாத், கல்லூரி படிப்பு முடித்தபிறகு இந்திய ராணிவத்தில் கேப்டனாக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

அதன் பிறகு தனது 28வது வயதில் இராணுவத்தை விட்டு விலகி விவசாயம், ஹோட்டல் என பல தொழில்கள் பார்த்து 1997-ல் டெக்கான் ஏவியேஷன் எனும் சார்ட்டர் ஹெலிகாப்டர் கம்பெனியை தொடங்கினார். வானத்தை அன்னாந்து பார்த்து விமானத்துக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்த மக்களும், விமானப் பயணம் என்பது வாழ்க்கை கனவு என நினைக்கும் அனைவரும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர் குறிக்கோள். 2003-ல் ஏர் டெக்கான் நிறுவனத்தை ஆரம்பித்து குறைந்த விலையில் விமான சேவை வழங்கியவர். விமானப் பயணத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் இவர் என்றே கூறலாம்.

இந்த கதையெல்லாம் கேட்ட தமிழக மக்கள் சூரரை போற்று படத்தை காண ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தனர். கொரோனா தொற்று பரவி தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் சூரரை போற்று படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து, ‘சூரரைப் போற்று’ படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா வெளியிட்டுள்ளார்.