சபரிமலை ஐயப்பன் விரத முறைகள் என்ன தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல அண்டை மாநில எல்லைகளை தாண்டி பக்தர்கள் அதிகமாக வந்து தரிசித்து செல்வர். இங்கு வரும் பக்தர்கள் கடும் விரதம் இருந்துதான் ஐயப்பனை தரிசிப்பார்கள். அப்படி என்னென்ன விரதமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அப்படியான விரத நடைமுறைகள் என்ன என்று பார்க்கலாமா?
41 நாட்கள் விரதம்
பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சிறப்பானது. குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையை ஆரம்பிக்க வேண்டும். துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பனின் திருவுருவ பதக்கம் ஒன்றினை இணைத்து மாலையணிய வேண்டும். மாலையும் கூட, தாமாக அணியக் கூடாது.
குருசாமி:
பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பக்தரை குரு சாமியாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, கோயில்களிலோ குருவை வணங்கி அவர் கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து, காலில் விழுந்து வணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை அணிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து, குருசாமியை முழு மனதுடன் ஏற்று, அவர் சொல்வதை தேவவாக்காக கருதி, மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடக்க வேண்டும். நீலம், கருப்பு அல்லது காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டியது அவசியம்.
இருவேளை குளியல்:
காலை, மாலை இருவேளைகளிலும் அதுவும் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும், குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டு ஐயப்பன் திருநாமத்தை சரண கோஷமாக சொல்ல வேண்டும்.
மனக்கட்டுப்பாடு அவசியம்:
மனக்கட்டுப்பாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், அசைவ உணவு உட்கொள்ளுதல், சினிமா பார்ப்பது, உல்லாச பயணம் மேற்கொள்வதை விரத காலங்களில் தவிர்க்க வேண்டும். மனதாலும், வாக்காலும், செயலாலும் எந்த பெண்ணையும், நினைக்காமல், அணுகாமல், தீவிர பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால், கரோனா இல்லை, மலையேறுவதற்கு தகுதியானவர் என்ற சான்றிதழை வாங்கிவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.