தசை திறன் குறைபாடு:
தசை சிதைவு நோய் அல்லது தசை திறன் குறைபாடு (muscular dystrophy) ஒரு அரியவகை கொடிய நோய் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.தசைகளை சேதப்படுத்துவது மட்டுமின்றி அதை பலவீனப்படுத்தும் மரபுவழி நோய்களின் ஒரு குழுதான் இந்த தசை திறன் குறைபாடு நோய்.
ஆரம்பத்தில் நடக்கத் தடை போடும் இந்த நோய், அடுத்தடுத்து கால், கைகளை செயலிழக்கச் செய்யும். படிப்படியாக ஒரே இடத்தில் படுக்கச் செய்து அதன் உக்கிரத்தை காட்டும். உடல் அசைவற்று எதுவுமே செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் பொதுவான மருத்துவ வட்டார கூற்று.
இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது என்றும் இந்த நோய்க்கு குழந்தைகள் தான் அதிகமாக பாதிப்படைகின்றனர் எனவும் மருத்துவ தரவுகள் கூறுகின்றன.
இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும்.
பின் படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட தூக்க முடியாது. 12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும்.
சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். எனவே நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆரம்பகால அறிகுறிகள்:
அசாதாரண நடைப்பாங்கு.
தசைகளில் வலி மற்றும் விறைப்பு.
ஓடுவது மற்றும் குதிப்பதில் சிரமம்.
உட்கார்ந்து எழுந்திரிப்பதில் சிரமம்.
கால்விரல்கள் மீது நடப்பது.
கற்றல் மற்றும் பேச்சு குறைபாடுகள்.
அடிக்கடி கீழே விழுதல்.
முற்போக்கான அறிகுறிகள் பின்வருமாறு:
வரையறுக்கப்பட்ட இயக்கங்கள்.
சுவாச பிரச்சனைகள்.
முதுகு வளைவு.
பலவீனமான இதய தசைகள்.
விழுங்குவதில் சிக்கல்கள்.
குறைந்த ஆயுட்காலம்.
தசை திறன் குறைபாட்டில் பல வகைகள் உள்ளன, அவை பின்வருமாறு:
டுச்சென் எம்.டி ( DMD ) – சிறுவர்களில் (ஆண் குழந்தைகள்) காணப்படுகிறது.
மயோடோனிக் டிஸ்டிராபி – முற்போக்கான தசை பலவீனம் அல்லது சிறிய தசைகளை முதலில் பாதிக்கும் தசை வீணாக்குதல். இது ஆண்கள் மற்றும் பெண்களை சமமாக பாதிக்கிறது.
ஃபாசியோஸ்காபுலார்ஹுமெரல் எம்.டி – முகம், தோள்கள், மேல்கை மற்றும் கெண்டைக்கால் பகுதிகளை பாதிக்கிறது.
பெக்கர் எம்.டி – பெரும்பாலும் சிறுவர்களை பாதிக்கிறது, ஆனால் டுச்சென் எம்.டி விட குறைந்த கடுமையானது.
லிம்ப்-கிர்டில் எம்.டி ( LGMD Type ) – தோள் மற்றும் இடுப்பு தசைகள் போன்ற பெரிய தசைகளை பாதிக்கிறது.
ஒக்குளோஃபாரிங்கியல் எம்.டி – வாழ்க்கையின் பிற்பகுதியில் தொடங்குகிறது (50 வயது மற்றும் அதற்குமேல்) மற்றும் கண்கள் மற்றும் தொண்டை தசைகளை பாதிக்கிறது.
எமிரி-ட்ரிஃபஸ் எம்.டி – இளம் பருவத்தில் தொடங்குகிறது மற்றும் மேல்கை, கழுத்து மற்றும் கால்களில் ஏற்படும் தசை சுருக்கங்களை உள்ளடக்கியது.
இந்த நோயை கட்டுபடுத்த நாம் செய்ய வேண்டியவை:
வைட்டமின் பி, டி :
தசை திறன்குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உணவுகளை கொடுத்தால் அவர்களின் மரணத்தை தள்ளிப்போட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். வைட்டமின் பி, ஆன்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த உணவுகளை கொடுப்பதனால் இந்தநோயின் பாதிப்பு ஓரளவிற்கு கட்டுப்படும்.
அதே போல் வைட்டமின் டி உணவுகளை உண்ணக்கொடுக்கவேண்டும். சூரியஒளியில் வைட்டமின் டி அதிகம் கிடைக்கிறது எனவே தசைத்திறன் நோயினால் பாதித்த குழந்தைகளை தினசரி சிறிதுநேரம் சூரியஒளி படுமாறு நடக்கச் செய்யலாம்.
செலினியம் நிறைந்த உணவுகள்:
பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் இளமை காக்கும் உணவுகளாகும். இந்த ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது.
வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. எனவே வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கவேண்டும்
அருமையான தொகுப்பு தொடரட்டும் நன்றி…