விநாயகர் சதுர்த்தி விவகாரம் தொடர்பாக அதிமுகவும், பாஜகவும் டுவிட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன.
*கூட்டணியில் விரிசலா?*
கந்த சஷ்டி கவசம் விவகாரத்திலேயே அதிமுக, பாஜக கட்சிகளிடையே கருத்து வேறுபாடு தொடங்கியது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், அதிமுக அரசு மீது பாஜக அதிருப்தியிலேயே இருக்கிறது. குறிப்பாக, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்ட போது, உடனடியாக போட்டி போட்டு கண்டனம் தெரிவித்த ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதனிடையே தான், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என்றும் படுதோல்வி அடையும் எனவும் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல், தமிழகத்தில் பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கட்சி துணை தலைவர் வி.பி.துரைசாமி பேசினார்.
*தலை தூக்கும் அதிமுக*
ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன், பாஜக கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்களுக்கு அதிமுக கிரீன் சிக்னல் கொடுத்து வந்தது. முத்தலாக் தடை மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் வெளிநடப்பு, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் ஆதரவு என பாஜகவுடன் இணைக்கமாக அதிமுக செயல்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் வரும் தருவாயில் திடீர் யூடர்ன் போட்ட அதிமுக, மும்மொழி கொள்கை, ஓபிசி இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரணியில் நிற்கிறது. இந்தநிலையில் தான், தமிழக அரசியலில் அடுத்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், பாஜக யாரை கை காட்டுகிறதோ அந்த கட்சி தான் ஆட்சி அமைக்கும் எனவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
*டுவிட்டரில் வார்த்தை போர்*
அதிமுக – பாஜக தலைவர்கள் மத்தியில் நிலவி வரும் இந்த கருத்து வேறுபாடுகள் தற்போது பட்டி, தொட்டியெங்கும் பரவி உள்ளது. செய்தித்தொடர்பாளர்கள் முதல் அடிப்படை தொண்டர்கள் வரை அனைவரும் வாய் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,”கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு”, என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இந்த டுவீட், அதிமுக – பாஜக இடையே டுவிட்டரில் வார்த்தை போரை ஏற்படுத்தியுள்ளது.

*யாருக்கு ஆண்மை இருக்கு?*
“ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர்”, என்று எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன் டுவீட் செய்துள்ளார். தொடர்ந்து, “பெங்களூருக்கு பயந்து டெல்லியில் தஞ்சம்
அடைந்ததால் காப்பாற்றப்பட்ட ஆண்மை”, “முந்தானைக்கு பின்னால் ஒளிந்து 30 வருடங்களாக தலை நிமிராமல் இருந்த ஆண்மை …டெல்லியில் பாரதத்தின் தலைமகனை சந்தித்தபின் தலைநிமிர்ந்த ஆண்மையை நினைத்து பெருமை கொள்ளுங்கள்…”, “இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதில் அண்ணன் தம்பியாக இருக்கிறார்கள் அதிமுகவும் திமுகவும்…” என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் அதிமுகவை கிழித்து எறிந்துள்ளார். இந்தநிலையில், ஏற்கெனவே அதிமுகவின் தலைமையான ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். மீது ஆண்மை தொடர்பான விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.