தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ மத்திய அரசு வெளியிடாததைக் கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ அண்மையில் வெளியிட்டது. இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு பல்வேறு இன்னல்களை விளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பலர் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டிருப்பது குறித்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இது குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இயற்கைக்குப் புறம்பான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ பற்றி மக்கள் கருத்து சொல்வதற்கான கெடு ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு முடிவடைகிறது” என்றார்.
மேலும் இதுவரையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இஐஏ 2020-க்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிடவில்லை என குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின் மக்கள் கருத்தை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு செயல்படுவதாக மத்திய அரசை சாடியுள்ளார்.