எல்லைகள், கண்டங்களை கடந்து ஒட்டுமொத்த மனித இனத்தை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. சாதி, மதம், வர்க்கம், மொழி பேதமின்றி அனைவரையும் கொரோனா சூறையாடி வருகிறது. தொற்றை குணப்படுத்த மருந்து, தற்காத்துக் கொள்ள தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், மனித குலம் திக்குமுக்காடி வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், இறுதி சடங்கு போன்ற துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்க முடியாமல் மனிதம் அல்லாடி நிற்கிறது. முன்னெப்போது இல்லாத அளவிற்கு இந்த கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் சுக்குநூறாக சிதைந்துள்ளன. சம்பள குறைப்பு, வேலை இழப்பு, சொந்தங்களை காண முடியாத தவிப்பு என நான்கு புறங்களில் இருந்தும் குண்டுகள் பாய்கின்றன. தனிமனித இடைவெளி, போக்குவரத்து கட்டுப்பாடுகளால் நட்பு, நேசங்களை கட்டித் தழுவி இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில், அணைப்புக்கான ஏங்கும் மனங்களுக்கு நூதன தீர்வை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. கொரோனா காலத்தில் நண்பர்கள், உறவினர்களை கட்டித் தழுவ முடியவில்லையா? கவலை வேண்டாம் மரங்களை அணைத்துக் கொள்ளுங்கள் என்கிறது. இது தொடர்பாக பேசிய இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணைய சந்தைப்படுத்தல் இயக்குனர் ஓரிட் ஸ்டெய்ன்பீல்ட், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், இயற்கையிடம் சரணடைய மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என தெரிவித்தார். மரங்கள் நிறைந்த வனப்பகுதிக்கு சென்று, அங்கு நாம் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதனால், நமது உடல் ஆரோக்கியமடையும் எனவும் கூறினார். தொடர்ந்து, ஒரு மரத்தை கட்டிப்பிடித்து, அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரலில், தனிமையை தவிர்க்க ஐஸ்லாந்து நாடு இதே போன்ற கட்டிப்பிடி வைத்தியத்தை அந்நாட்டு மக்களுக்கு பரிந்துரை செய்தது. அதன் வெற்றியின் தொடர்ச்சியாகவே இந்த முறையை இஸ்ரேல் நாடு அறிமுகம் செய்துள்ளது. தனிமையில் வருந்துவோர் யாசிப்பது அன்பும், அரவணைப்பும் தான். கொரோனா அச்சமின்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தனிமைக்கு விடை கண்ட யோசனைக்கு சல்யூட்.