நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு ‘வாழ்த்து’ சொல்வதற்குப் பதிலாக ‘ஆறுதல்’ சொல்வதைப் போல அவலம் எதுவுமில்லை.
‘கொரோனா தொற்று’ போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நீதிமன்றத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சூர்யாவின் அறிக்கை நீதிபதிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் “, என்று தெரிவித்துள்ளார்