மதுரையை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்துள்ளனர்.
சொர்க்கத்தில் திருமணம் – அதிகாரத்தில் கூட்டணி
ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைவாசம் மற்றும் அரசியல் நாடகங்களுக்கு இடையே தமிழகத்தின் தற்செயலான முதலமைச்சராக அரியணை ஏறினார் எடப்பாடி பழனிசாமி. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற பழமொழியை போல், அதிகாரத்தை மையமாக கொண்டே அரசியல் கூட்டணிகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அப்போது எதிரெதிர் அணிகளாக இருந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் குழுவினர் ஒன்றிணைந்தனர். ஆட்சி மற்றும் அரசியல் அதிகாரத்தில் சம பங்கு என்ற அடிப்படையில் கைகோர்த்தனர். ஆரம்பத்தில், இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்றே கணிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த அமைச்சர்களுமே இதை நம்பினர். ஆனால், 22 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு இணையான வெற்றி, அதிமுகவில் எழுச்சியை ஏற்படுத்தியது. 2021 சட்டசபை தேர்தலை குறிவைக்கும் அளவிற்கு அதிமுக தலைவர்கள் இடையே புது நம்பிக்கை முளைத்துள்ளது.
கொங்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலும், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்டவை அடங்கிய தென் மாவட்டங்களும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அவரது தளபதியும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் நல்லாட்சியால் அதிமுகவின் செல்வாக்கு வளர்ந்துக் கொண்டே போகிறது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் விவகாரம், கட்சியிலும், ஆட்சியிலும் ஒதுக்கப்படும் ஓபிஎஸுக்கான ஆதரவு குறைவு, சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முக்குலத்தோர் ஆதிக்கம் செலுத்தும் தென் மாவட்டங்களில் அதிமுக பலம் குறைந்து வருகிறது.
மதுரையில் 2ம் தலைநகர் அமைக்க கோரக்கை
இந்தநிலையில், மதுரையை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் சொல்வது என்ன?
ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்த போது அங்கு இரண்டு தலைநகரங்கள் செயல்பட்டு வந்தன. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை காந்திநகரிலும், அகமாபாத்திலும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைய உள்ளன. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிர்வாக சிக்கலை களைய இரண்டிற்கும் மேற்பட்ட தலைநகரங்கள் உள்ளன. இதன் அடிப்படையில், தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும். தலைநகருக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளது.
மதுரையில் ஏற்கெனவே, உயர்நீதிமன்ற கிளை, சர்வதேச விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கிவிடும். அதேபோல், மதுரையிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் சாலை கட்டமைப்பு தேவைக்கு ஏற்ப உள்ளது. தலைநகர் நிர்வாகம் அமைவதற்கு தேவைப்படும் 10,000 ஏக்கர் நிலத்தை மதுரை புறநகர் பகுதிகளில் தேர்வு செய்ய முடியும். இதன் மூலம், சென்னையில் நெரிசலை குறைக்க முடியும். தென் மாவட்டங்களில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். எனவே, தென் மாவட்ட மக்களின் கனவை நனவாக்கும் வகையில் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும், என்று தீர்மானம் இயற்றி உள்ளனர்.
2ம் தலைநகர் வரலாறு
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலேயே தமிழகத்திற்கு இரண்டாம் தலைநகர் அமைப்பது தொடர்பான யோசனை முளைத்துவிட்டது. 1983ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். திருச்சியை இரண்டாம் தலைநகராக மாற்ற முயற்சித்தார். சென்னையில் அப்போது திமுகவுக்கு இருந்த செல்வாக்கை குறைத்து, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தனது பலத்தை கூட்டிக் கொள்ள இந்த முயற்சியை மேற்கொண்டார். இந்திரா காந்தி மரணம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பால் இரண்டு தலைநகர் திட்டத்தை எம்.ஜி.ஆரால் நிறைவேற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து, அவ்வப்போது திருச்சி மற்றும் மதுரையை மையமாக கொண்டு இரண்டாம் தலைநகர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றன.
புதிய தலைநகரை உருவாக்க சட்ட நடைமுறை என்ன?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, மாநிலம் மற்றும் தலைநகரத்தின் எல்லைகள் மற்றும் பெயர்களை மாற்ற நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக சட்டசபை நிறைவேற்றி அனுப்பும் தீர்மானம் குறித்து நாடாளுமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும். அரசியலமைப்பின் 3வது சட்ட பிரிவின் படி மாநிலத்தின் பெயரை மாற்ற கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இதனால், புதிய தலைநகரை உருவாக்க மாநில சட்டசபை நிறைவேற்றி அனுப்பவும் தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.
இரண்டாம் தலைநகர் எப்போது சாத்தியம்?
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கோரிக்கைக்கு மதுரையை சேர்ந்த மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களே கோரிக்கை வைப்பதால், நடப்பு அதிமுக ஆட்சியில் மதுரையில் தலைநகர் உருவாகாவிட்டாலும், தேர்தல் அறிக்கையில் இது முக்கியமான வாக்குறுதியாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் இரண்டாவது தலைநகரை உருவாக்குவதில் பல்வேறு சாதகங்கள் உள்ளன. இதனால், இதை வெறும் அரசியல் காய்நகர்த்தலாக கொள்ளாமல், மக்கள் நலத்திட்டமாக செயல்படுத்த வேண்டும்.