துப்பாக்கி, தேர்தல்., எதனாலும் ஒன்னும் சாதிக்க முடியாது: தமிழீழ விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச பேச்சு!
பிரபாகரன் துப்பாக்கியால் சாதிக்க முடியாததை, தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் மூலம் அடைவதை அனுமதிக்கமாட்டோம் என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபரும் பிரதமரும் இணைந்து ஆட்சி செய்யும் அரை-அதிபர் முறை அமலில் உள்ளது. அங்கு ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சவும், பிரதமராக மகிந்த ராஜபக்சவும் உள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்களின் இலங்கை பொதுஜன முன்னணி கட்சிக்கு தனி பெரும்பான்மை இல்லை. இதனால், ராஜபக்ச சகோதரர்களின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது.
இதை சரி செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார். அதன்படி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தை கலைத்தார்.
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால், தேர்தல் முதலில் ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், நிலைமை சீராகாததால், தேர்தல் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பிரதமர் பதவியை தக்கவைத்து கொள்ள மகிந்த ராஜபக்ச தொடர்ந்து தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய அவர், எனது அதிரடி நடவடிக்கையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 30 ஆண்டு கால வன்முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனால், இலங்கை பயங்கரவாதத்தில் இருந்து விடுபட்டுள்ளது. இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி சில கட்சிகளுடன் இணைந்து, அதன் இலக்கு அடைய பார்க்கிறது. பிரபாகரன் துப்பாக்கியால் சாதிக்க முடியாததை, தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் மூலம் அடைய அனுமதிக்கமாட்டோம். தெற்கில் உள்ள சிங்களவர்கள் வடக்கே செல்லலாம், வடக்கில் உள்ள தமிழர்கள் எங்கும் பயணம் செய்யலாம், என்றார்.