திருமணம் என்றாலே பிரமாண்டமாகக் கொண்டாடும் வழக்கத்தை பெரும்பாலான மக்கள் கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய கொரோனா சுழல் இந்த வழக்கத்தை மாற்றி அமைத்திருக்கிறது. திருமண மண்டபங்கள் மூடப்பட்டிருப்பதால் சாதாரண மக்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை வீட்டிலோ அல்லது சிறிய கோயில்களில் எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குறையைத் தீர்த்து வைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஹக்கீம் என்ற சிற்பக் கலைஞர் நடமாடும் திருமண மண்டபத்தை உருவாக்கியுள்ளார். இதில் சிறப்பு அம்சமாக யானைகள், கொரில்லா போன்ற வன விலங்குகள் அசைந்து செல்லக் கூடிய பொம்மைகளும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “குறைந்த செலவில் இந்த திருமண மண்டபம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை அனைத்து இல்ல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தேவையான அனைத்து கருவிகளும் இடம்பெற்றிருக்கிறது” என்று கூறினார்.
மேலும், “இந்த மண்டபத்தில் 50 பேர் வரை உட்கார்ந்து சாப்பிடும் அளவு இடம் உள்ளது. இதில் ஒலிக் கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இல்ல நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் ஜமக்காளம், நாற்காலியில் தொடங்கி அனைத்து விதமான பொருட்களும் அமைத்துத் தரப்படும்” என்றார். இதற்கென தனிக் குழு அமைத்து நிகழ்ச்சிகளை எந்த ஒரு குறையுமின்றி சிறப்பாக நடத்தித் தருவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நடமாடும் திருமண மண்டபத்தில் உடுமலை காந்தி நகரைச் சேர்ந்த மதன்குமார், நந்தினி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வழக்குரைஞர் கண்ணன் திருமண மண்டபத்தை அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோது, ” கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றி திருமணம் நடைபெற்றுள்ளது. ஹக்கீம் குழுவினர் முகக்கவசம் அணிவதை நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரிடமும் வலியுறுத்தி வந்தனர்” என்றார் . மேலும் உள்ளே வருபவர்களின் வெப்ப நிலையைப் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சேனிடைசர் வழங்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறினார்.
தமிழகத்தில் இது போன்ற ஒரு திருமணம் மண்டபம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஏழை எளிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை இதை தற்போதைய சுழலில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட மண்டபத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.