இந்தியாவிலேயே முதன்முறையாக இமாச்சலப் பிரதேசத்தில் பெருங்காயத்தை பயிரிட்டு சி.எஸ்.ஐ.ஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் இமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜி (ஐ.எச்.பி.டி) சாதனை படைத்துள்ளது.
இந்தியர்களின் சமையறையில் பெருங்காயம் இன்றியமையாதது.
ஆனால், இன்று வரை இதை ஈரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தான் இந்தியா இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, உலகின் பெருங்காய உற்பத்தியில் சுமார் 40 சதவீதத்தை இந்தியா பயன்படுத்துகிறது.
ஆண்டிற்கு சுமார் 730 கோடி மதிப்பிலான 1,200 டன் பெருங்காயத்தை பிற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. அசஃபோடிடா என்று அழைக்கப்படும் பெருங்காய தாவர வகை இந்தியாவில் போதிய அளவு கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம்.
இதனால், பெருங்காயத்தை இந்தியாவிலேயே பயிரிடும் முயற்சியில் சி.எஸ்.ஐ.ஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் இமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜி (ஐ.எச்.பி.டி) தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. சி.எஸ்.ஐ.ஆரின் முயற்சியில் ஈரானில் இருந்து 6 வகையான பெருங்காய விதைகள் இந்தியா வந்தது.
இதைத்தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச மாநிலம் பாலம்பூரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் இமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜி (ஐ.எச்.பி.டி) இந்தியாவிலேயே முதன்முறையாக பெருங்காயத்த பயிரிட்டு சாதனை படைத்துள்ளது. மிகவும் குளிர்ந்த சீதோஷ்ணம் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலம் குவாரிங் கிராமத்தில் 5 ஹெக்டேர் பரப்பளவில் பெருங்காயம் தற்போது பயிரிடப்பட்டுள்ளது.
அரசின் உதவியுடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 300 ஹெக்டேர் பரப்பளவில் பெருகாயத்தை பயிரிட சி.எஸ்.ஐ.ஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் இமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்த முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் பெருங்காய இறக்குமதி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.