வளர்ச்சிையை நோக்கி என அடிமடியில் கைவைப்பதா?-சர்ச்சையில் சிக்கிய இஐஏ வரைவு: முழு விவரம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) வரைவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை இந்த வரைவுக்கு எதிராக விவசாய அமைப்புகளுடன் இணைந்து, பல்வேறு கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்தநிலையில், இந்த வரைவு தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்:
தொழில் புரட்சி, தொழில் மயமாதலின் விளைவுகளை 20ம் நூற்றாண்டின் மத்தியில் உலகம் உணரத் தொடங்கியது. 1960களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களும், இயக்கங்களும் பல்வேறு நாடுகளில் வெடித்தன. இதன் விளைவாக, 1972ல் மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஸ்டாக்ஹோம் பிரகடனத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 1974ம் ஆண்டில் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டமும், 1981ம் ஆண்டில் காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டமும் இயற்றப்பட்டன. ஆனால், போபால் பேரழிவுக்கு பின்பு, 1986ம் ஆண்டில் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA):
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1994ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்படி, நிலக்கரி சுரங்கம், அணு மற்றும் அனல் மின் நிலையங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள், தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வது அவசியமாக்கப்பட்டது. குறிப்பிட்ட திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அப்பகுதி மக்கள் சந்திக்கும் இன்னல்கள், சாதக பாதகங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு விதிமுறைகள் 2006ம் ஆண்டில் முதன்முறையாக திருத்தப்பட்டது. இந்தநிலையில், இந்த விதிமுறைகளை மீண்டும் திருத்த மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, இஐஏ 2020 வரைவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இஐஏ 2020 வரைவு சொல்வது என்ன?
முதல் திருத்தம்:
புதிய இஐஏ 2020 வரைவின் படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் ஒரு திட்டத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது திருத்தம்:
பொதுமக்கள் கருத்துகளை சமர்ப்பிக்க வழங்கப்படும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்தை தொடங்குவதற்கும் முன்பும், அந்த பகுதி மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும்.
பொதுவாக அப்பகுதிகளில் செயல்படும் தன்னார்வ அமைப்பினர் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்துவிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இதன்படி, கருத்து கேட்பு கூட்டங்களில் பொதுமக்கள் தங்கள் கருத்துகள் தெரிவிப்பர். ஆனால், கால அவகாச குறைப்பால், பொதுமக்களால் திட்டத்தை முழுமையாக புரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க முடியாமல் போகலாம்.
மூன்றாவது திருத்தம்:
ஒரு தொழிற்சாலை செயல்பட தொடங்கிய பிறகு, அது சுற்றுச்சூழல் அனுமதிக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்து அந்த தொழில்சாலை ஆண்டிற்கு இரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், புதிய வரைவின் படி இந்த அறிக்கையை ஆண்டிற்கு ஒரு முறை சமர்ப்பித்தால் போதும். இந்த முறையால், தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மீளமுடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகள், சமூக மற்றும் சுகாதார விளைவுகள் கவனிக்கப்படாமல் போகலாம்.
நான்காவது திருத்தம்:
ஒரு திட்டத்தை மூலோபாய திட்டம் (strategic) என்று மத்திய அரசு அறிவித்துவிட்டால், அந்த திட்டத்திற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை.
ஐந்தாவது திருத்தம்:
புதிய இஐஏ 2020 வரைவின் படி ஒரு திட்டம், தொழிற்சாலை தொடர்பான விதிமீறல்கள் குறித்து அரசு மற்றும் தொழிற்சாலையின் உரிமையாளர் மட்டுமே புகார் எழுப்ப முடியும். பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி இல்லை.
ஆறாவது திருத்தம்:
புதிய விதிமுறையின் படி, 1,50,000 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியம் இல்லை. முன்னதாக 20,000 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது, சாலைகளை போடுவது மிக முக்கியமானது தான். ஆனால், பொருளாதார வளர்ச்சி என்ற ஒற்றை கண்ணிற்காக, சுற்றுச்சூழல் என்ற மற்றொரு கண்ணை குத்துவது ஏற்புடையதல்ல.