அவரவர் தாய்மொழியில் பொறியியல் படிப்பு – இந்தியிலிருந்து தொடக்கம்!
2021-2022 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறையை உருவாக்க மத்திய கல்வித் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
மத்திய பாஜக அரசு, அண்மை காலமாகவே தாய்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய தேசிய கல்வி கொள்கையிலும் கூட, 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஐஐடி, என்ஐடிகளில் தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் உள்ள சில ஐஐடி மற்றும் என்ஐடி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தாய்மொழியில் பயில விரும்பும் மாணவர்களுக்காக, புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு
பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய உயர் அதிகாரி ஒருவர், “முதல் கட்டமாக ஐஐடி பனராஸில் இந்தி மொழியில் பொறியியல் கல்வி தொடங்கப்பட உள்ளது. தொடர்ச்சியாக, பிற ஐஐடி, என்ஐடிகளிலும் அவரவர் தாய்மொழிகளில் பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும். “என்று கூறினார்.
இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு 2021 முதல் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், பொறியியல் கல்வியை தாய்மொழியில் கற்பிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.