இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் இதுவரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அண்மையில் இந்தியா தனது முதல் உள்நாட்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. கோவேக்சின் எனப்படும் இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து மனிதர்களுக்கு உட்படுத்திப் பரிசோதிக்க திட்டமிட்டிருந்தது. இதற்கு சென்னை உட்பட 12 இடங்களை ஐசிஎம்ஆர் முன்பே தேர்வு செய்திருந்தது.
இந்நிலையில் அதன் முதற்கட்டமாக ஹரியானாவில் உள்ள பண்டித் பகவத் தயாள் சர்மா முதநிலை மருத்துவ கல்லூரியில் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை தொடங்கியது. இதில் 100 பேர் சோதிக்கப்பட உள்ளார்கள். இதுவரையில் 3 பேருக்கு போடப்பட்ட தடுப்பூசி எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனது டிவிட்டர் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சோதனைகளை கூடிய விரைவில் நடத்தி முடிக்க ஐசிஎம்ஆர் ஒரு பக்கம் வலியுறுத்தி வந்தாலும், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 6 மாதம் முதல் 1 வருட காலம் ஆகலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதையே தான் உலக சுகாதார நிறுவனமும் கூறுவது குறிப்பிடத்தக்கது.