பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி வரும் நவம்பர் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பீகாரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, இந்துஸ்தானி அவாம் சோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் கைகோர்த்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. வாக்குகளை பிரிக்கும் வகையில், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நகர் மற்றும் கிராமங்களில் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். விளையாட்டுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்”, உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
உயிர்களை காவு வாங்கி பலதரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வரும் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் கொரோனா தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக., பீகார் தேர்தல் அறிக்கையில் வருகிற பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என தெரிவித்திருப்பது பிற மாநில மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதில் பாஜக வெற்றி பெற்றால் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றால் தோற்றிவிட்டால் பீகார் மக்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுமா., இல்லை பாஜக ஆளாத மாநிலங்களுக்குதான் கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயித்து விற்கப்படுமா என்ற கேள்விகள் சாமாணியர்களிடம் எழுந்து வருகிறது.