கொரோனாவின் கோரப் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பல்வேறு கட்ட பொதுமுடக்கங்களும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கொரோனா தாக்கம் குறைந்ததோ, இல்லையோ பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கு உலகளவில் மிகவும் கடுமையான ஊரடங்கை விதித்த இந்தியா ஒன்றும் விதிவிலக்கில்லை. குறிப்பாக, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்தியாவில் 2009-10ம் நிதியாண்டிற்கு பிறகு, 2015-16ல் உச்சம் தொட்ட பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சரிவுக்கு கொரோனா கால பொதுமுடக்க நடவடிக்கைகள் கூடுதல் வலு சேர்த்துள்ளன.
சம்பள குறைப்பு, வேலை இழப்பு போன்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள் நுகர்வு திறனை இழந்தனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை குறைந்தது. வாகனம், வீடு, தங்கம் போன்றவற்றின் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தங்கத்தின் தேவை குறைந்ததால், தங்கத்தின் இறக்குமதியும் சரிவில் சென்றது.
இந்தநிலையில், நடப்பாண்டில் தங்கத்தின் இறக்குமதி 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக தங்க சபையின் தகவலின் படி, 2020 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 78.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பொதுமுடக்க காலத்தில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 11 டன் தங்கம் மட்டுமே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 647 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டின் முதல் பாதியில் 90 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்ற எடுத்துக் கொண்டால் கூட, நடப்பாண்டில் தங்கத்தின் இறக்குமதி 350 டன் என்ற அளவிலேயே இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
எண்ணெய்க்கு அடுத்து இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பொருள் தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும், கற்களும் தான். இதற்காக ஆண்டிற்கு சுமார் 60 பில்லியன் டாலர்களை இந்தியா செலவிடுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 4.48 லட்சம் கோடியாகும். ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் கற்களின் இறக்குமதி பாதியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.