கேரள தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை தனக்குத் தெரியும் என்று, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்தது தொடர்பான வழக்கு கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை, என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் கேரள முதலமைச்சரின் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனால், சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தான் ஸ்வப்னாவிற்கு மாநில அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனிடையே, முதலமைச்சருக்குத் தெரிந்துதான், ஸ்வப்னாவுக்கு அரசு பணி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்தது. எனவே, இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷை தனக்குத் தெரியும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முதன்முறையாக ஓப்புக்கொண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐக்கிய அரசு அமீரகத்தின் தூதர் என்னை பல முறை சந்திக்க வந்திருக்கிறார். அப்போதெல்லலாம் அவருடன் ஸ்வப்னா சுரேஷ் வந்தார்.
முதலமைச்சரை தூதர் ஒருவர் அடிக்கடி சந்திப்பது வாடிக்கைதான். ஆனால், சிவசங்கருக்கும் ஸ்வப்னாவுக்குமான உறவு பற்றி எனக்குத் தெரியாது” என்று கூறினார். இதுவரையில் ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.