உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி டிசம்பர் 6 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சட்டப்போராட்டம் 2020 ஆம் முடிவுக்கு வந்தது. அது பாபர் மசூதியில் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதற்கு பதிலாக ஐந்து ஏக்கர் நிலம் அரசு பாபர் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கூறியது.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட 49 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இடம்பெற்றிருந்த 17 பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து மீதமுள்ள 32 பேர் மீது உத்தரபிரதேச மாநில லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை இறுதிக் கட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேலும் 1 மாதம் கால அவகாசம் வழங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விசாரணை செய்து தீர்ப்பளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதுள்ள போதிய ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால் 32 பேரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
நீண்ட கால விவகாரமாக இருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல் நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பல்வேறு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.