2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஏன் தோல்வியை தழுவியது என்பது குறித்து, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றபோது, பிரதமர் பதவிக்கு சோனியா காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் பிறக்காத ஒருவரை பிரதமராக்கக் கூடாது என எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இதனால், அப்போது, காங்கிரஸில் சிறப்பாக பணியாற்றி வந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜியின் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. ஆனால், திடீரென மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். பின்னர், 2009ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றபோதும் மன்மோகன் சிங்கே பிரதமராக தொடர்ந்தார்.
இந்த காலகட்டத்தில், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சாரக பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்னும் சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் அவர் கூறி இருப்பதாவது:
“2004ம் ஆண்டு நான் பிரதமாகியிருந்தால் 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். இதை நான் ஏற்கவில்லை என்றாலும், நான் குடியரசு தலைவரான பிறகு, கட்சியின் தலைமை அரசியல் குறித்த கவனத்தை இழந்தது. ஒருபுறம், சோனியா காந்தியால் கட்சியின் விவகாரங்களை கையாள முடியவில்லை. மற்றொரு பக்கம், மன்மோகன் சிங் மற்றும் மற்ற எம்.பி.க்கள் இடையிலான தொடர்பு முறிந்துபோனது.
ஒரு நாட்டை ஆள பிரதமருக்கே தார்மீக அதிகாரம் உள்ளது. தேசத்தின் ஒட்டுமொத்த நிலை பிரதமரின் செயல்பாட்டையும் அவரது நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிறது. மன்மோகன் சிங் கூட்டணியைக் காப்பாற்றுவதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், அது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாதித்தது. “ என்று கூறியுள்ளார்.