பஞ்சாப் முதல் டெல்லி வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை முதல் கிசான் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் பாதலின் சிரோமணி அகாலி தள கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது.
இதனிடையே, ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பார்க்க சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ராகுல் காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தடை உத்தரவை மீறி சென்றதற்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் பிரச்சனை, உத்தரப்பிரதேச பாலியல் வன்கொடுமை விவகாரம் போன்ற தொடர் சிக்கல்களால் பாஜக அரசு கடும் நெருக்கடியில் உள்ளது.
இந்தநிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி கிசான் யாத்திரை மேற்கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். நாளை முதல் பஞ்சாப் முதல் டெல்லி வரை இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் அரசியலின் வளர்ச்சிக்கு ராமர் ரத யாத்திரை ஆற்றி பங்கு அனைவரும் அறிந்தே. எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி மேற்கொண்ட பெல்சி பயணம் அவரது தலையெழுத்தை மாற்றியது. 1977 மக்களவை தேர்தல் தோல்வியை காட்டிலும் தற்போது காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழலில், ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகளுக்கான ரத யாத்திரை கரையும் காங்கிரஸை கரை சேர்க்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.