நாட்டிலேயே சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம் என்ற அமைப்பு., ஆட்சி திறன், நிர்வாகம், நிலையான வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான இந்த மையம் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் நடப்பாண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பெரிய மாநிலங்கள் வரிசையில் தென் மாநிலங்கள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. 1.388 குறியீட்டு எண்களுடன் கேரளா முதலிடத்தையும், 0.912 எண்களுடன் தமிழ்நாடு 2ம் இடத்தையும் பிடித்துள்ளது.
3ம் இடத்தில் ஆந்திரா உள்ளது. கர்நாடகா 4வது இடத்தில் இருக்கிறது. மாநிலங்களை மோசமாக கையாண்டு, இந்த பட்டியலில், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இதேபோன்று, சிறிய மாநிலங்கள் பட்டியலில், 1.745 குறியீட்டு எண்களுடன் கோவா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. 0.797 எண்களுடன் மேகாலயா 2ம் இடத்திலும், அதைத்தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம் 3ம் இடத்திலும் உள்ளது. -0.363 குறியீட்டு எண்களுடன் மணீப்பூர், -0.289 எண்களுடன் டெல்லி, -0.277 எண்களுடன் உத்தரகாண்ட் மாநிலமும் கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ளன.
மிக சிறந்த நிர்வாகம் செய்யும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் 1.05 புள்ளிகளுடன் சண்டிகர் முதலிடத்தில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து, 0.52 எண்களுடன் புதுச்சேரி 2ம் இடத்திலும், 0.003 எண்களுடன் லட்சத்தீவு 3ம் இடத்திலும் உள்ளது. நெகட்டிவ் புள்ளிகளுடன் தாதர் மற்றும் நாகர் ஹவேலி, ஜம்மு – காஷ்மீர், மற்றும் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளன.