நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த மிக உயரிய விருதின் வரலாறு குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மனித குலத்தின் முன்னேற்றத்தையும், உலக அமைதியையும் போற்றும் இத்தகைய விருதை உருவாக்கியவர் ஒரு நாசகார வெடிபொருள் விஞ்ஞானி.
நிகழ்காலத்தில் அமைதியின் தூதுவராக அறியப்படும் ஆல்பர்ட் நோபல், ஒரு வேதியியலாளர், பொறியாளர், ஆயுத மற்றும் வெடிபொருள் தயாரிப்பாளர். அவரது பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ராணுவத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்புடையவை. குறிப்பாக, இவர் கண்டுபிடித்த டைனமைட் வெடிபொருள் மிகவும் பிரபலமானது. மனித குலத்தை அழிக்கும் வெடிபொருட்கள், ஆயுதங்களுக்கு காப்புரிமை கிடைத்ததன் மூலம் இவர் பெரும் பணக்காரரானார்.
ஸ்வீடனின் பிரபல பொறியியல் குடும்பத்தில் 1833ம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் நோபலுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். 1888ம் ஆண்டில் ஆல்பர்ட் நோபலின் சகோதரர் லுட்விக் நோபல் உயிரிழந்தார். அப்போது, பல செய்தித்தாள்கள் ஆல்பர்ட் நோபல் இறந்துவிட்டதாக தவறாக செய்தி வெளியிட்டன. அதில் ஒரு பிரெஞ்ச் செய்தித்தாள், மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது. இதை கண்ட ஆல்பர்ட் நோபல் மனம் உடைந்து போனார்.
மரணத்திற்கு பிறகு தான் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அழிவை மையப்படுத்தி தான் குவித்த சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிட்டார். சொத்துக்கள் முழுவதையும் பொது சேவைக்காக செலவு செய்ய பல உயில்களை எழுதினார். அதன்படிதான், நோபல் பரிசு உருவானது. இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்க தனது சொத்தை பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதினார்.
1896ம் ஆண்டு ஆல்பர்ட் நோபல், தனது 63 வயதில் இயற்கை ஏய்தினார். இதைத்தொடர்ந்து, 1901ம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆல்பர்ட் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் ஸ்வீடனுக்கு பதில், நார்வே வழங்கி வருகிறது. மேலும், 1969ம் ஆண்டு முதல் ஸ்வீடனின் மத்திய வங்கி நன்கொடையாக வழங்கிய பணத்தை கொண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசை இதுவரை தமிழகத்தை சேர்ந்த சர்.சி.வி.ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் பெற்றுள்ளனர். 100 ஆண்டுகளை கடந்த போதிலும், தன் மீதான கரையை போக்கவே ஆல்பர்ட் நோபல், நோபல் பரிசை உருவாக்கினார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. விருதை சுற்றி பல்வேறு சர்ச்சைகள், புறக்கணிப்புகள் இருந்தாலும், இன்று வரை உலகளவில் போற்றப்படும் மிக உயரிய விருதாக நோபல் பரிசு கொண்டாடப்படுகிறது.