கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட், ஜேஇஇ நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பல மாநிலங்களில் ஆண்டுத்தேர்வுகள், பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. மேலும், ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஐஐடி ஜேஇஇ மெயின் நுழைவு தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மே மாதத்தில் நடைபெற இருந்த நீட் நுழைவு தேர்வும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நீட், ஜேஇஇ நுழைவு தேர்வுகளை மீண்டும் ஒத்திவைக்கக் கோரி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. தேர்வுகளை ஒத்திவைத்துக் கொண்டே போனால் அது மாணவர்களுக்கு பெரும் இழப்பாக அமையும். கொரோனா தொற்றை காரணம் காட்டி ஒரு முழு கல்வியாண்டை வீணடிக்க முடியாது. தேர்வு குறித்த அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட்டால் அது மாணவர்களின் நலனை பாதிக்கும்”, என்று கூறிய நீதிபதிகள் நீட், ஜேஇஇ நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனால், நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.