கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே உள்ள நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எல்லை அருகே அமைக்கப்பட்ட சாலை. உத்தரகண்ட் மாநிலம் தார்ச்சுலாவையும் இந்திய நேபாள் எல்லையான லிபுலேக் பகுதியை இணைக்கும் விதத்தில் இந்திய தரப்பில் சாலை ஒன்று அமைக்கப்பட்டது. இதனை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த வழித்தடம் தங்கள் நாட்டு எல்லைப் பகுதியையும் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி நேபாள அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு இந்திய தரப்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும் அதனை ஒப்புக் கொள்ள நேபாள அரசு மறுத்து வந்தது.
இதனையடுத்து நேபாள அரசு இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இது இந்தியாவுடைய ஒருங்கிணைந்த பகுதி அதற்கு நேபாள அரசு உரிமை கோருவது சரியல்ல என்று கூறி இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் எதையும் கண்டு கொள்ளாமல் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி நாடாளுமன்றத்தல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா கீழ்சபை, மேல்சபை இரண்டிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.
அப்போது தொடங்கி நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி, சீன வைரஸை விட இந்திய வைரஸ் கொடியது, இந்தியாவால் தான் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக தூர்தர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து இந்திய சேனல்களையும் நேபாள அரசு தடை செய்துள்ளது.
மேலும் இது குறித்து நேபாள வெளிநாட்டு சேனல்கள் ஒளிபரப்பு கூட்டமைப்பின் தலைவர், “எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.