சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் அல் கொய்தா எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவர். இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டு வந்தார். அதில் மிகவும் முக்கியமான ஒன்று 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல். இதன் பின்னர் அவர் தலைமறைவானார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா திட்டம் ஒன்றை தீட்டி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் மறைந்த வாழ்ந்த வந்த ஒசாமா பின்லேடனை கண்டறிந்து அமெரிக்கா சிறப்பு படைகளை அனுப்பி கடந்த 2011 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி சுட்டுக் கொன்றது.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது அங்கு பேசிய பிரதமர் இம்ரான் கான், ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என்று கூறினார். அவரை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்க படையினர் எங்கள் நாட்டிற்குள் நுழைந்து கொலை செய்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் நாங்கள் துணை நின்ற போதிலும் இப்படி எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார்.
அண்மையில் அமெரிக்கா இந்த ஆண்டிற்கான பயங்கரவாத அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை எதிர்ப்பதற்கு அந்நாடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலை தொடர்ந்தால் தற்போது கிரே பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளது. கருப்புப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச அளவில் நிதி பறிமாற்றம், பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை வெளியிட்டதற்கு அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தெரிவித்த கருத்து, அந்நாடு பயங்கரவாதத்தை இன்றளவும் ஆதரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவோடு நெருக்கமான உறவில் இருந்த பாகிஸ்தான் தற்போது எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சீனா இருநாடுகளும் இந்தியாவுடன் எல்லை விவகாரத்தில் பிரச்னைகளை சந்தித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. கொரோனா வைரஸ் நோய் தொற்றால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது அந்நாடு சீனா பக்கம் சாய்ந்து விட்டதா என்கிற கேள்வி எழுகின்றது.