ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், இந்த வரைபடத்திக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறினார்.

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் சா்ச்சைக்குரிய பிராந்தியமாக குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீரும் பாகிஸ்தான் நாட்டினுடையது என சித்திரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஜுனகத் பாகிஸ்தான் பகுதியாக காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட அந்த வரைபடத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம்.
இது ஒரு அபத்தமான நடவடிக்கை. இந்திய நாட்டின் அங்கமான குஜராத் மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேங்களை உரிமை கோருவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படியும், சர்வதேச அளவிலும் செல்லுபடியாகும் நிலையில் இல்லை. இந்த முயற்சி பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும், பிராந்திய ஆக்கிரமிப்பையே விரும்புகிறது என்பதை உறுதிபடுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.