அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் பெண்கள், இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அதிமுகவில் நிலவி வந்த பனிப்போர் நேற்று இனிதே முடிவுக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தை குஷிப்படுத்த வழிகாட்டுதல் குழுவும், எடப்பாடி பழனிசாமியை சந்தோஷப்படுத்த முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அதிமுக வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவில் பல்வேறு சமூகம், பிராந்தியத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், எடப்பாடிக்கு மிக நெருக்கமான அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் (கிறிஸ்தவர்) ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. நாடார் சமூகத்தை சேர்ந்தவர் மனோஜ் பாண்டியன் (கிறிஸ்தவர்). எம்.எல்.ஏ மாணிக்கம் தேவேந்திர குல வேளாளர் சேர்ந்தவர்.
மேலும், மீனவ சமூகத்தை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், பிள்ளை சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகன், யாதவர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதில், 6 அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், மீதமுள்ள 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் வாய்ந்த இந்த குழுவில் பெண்கள், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தராதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அகில இந்திய ரீதியில் பெண்களுக்கு உரிமை, பிரதிநிதித்துவம் கொடுத்தது அதிமுக. இன்னும் பல குழுக்கள் இருக்கின்றன. அதில் அவர்களுக்கு இடம் இருக்கும்”, என்று விளக்கம் அளித்தார்.