முதலமைச்சர் இருக்கை யாருக்கு என்ற போட்டி இரு கட்சிகளிடையே ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய ஆளும் அதிமுக கட்சியில் இரு தலைவர்களிடையே போட்டி ஏற்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது சில காரணங்களால் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஓபிஎஸ் எதுவும் சிறப்பாக செயல்படவில்லை. ஜெ., உத்தரவுக்கு இணங்க தலையாட்டியே செயல்பட்டார்.
சந்தர்ப்பச் சூழ்நிலைகளை சாதமாக பயன்படுத்தி முதலமைச்சர் பதவியில் ஏறிய எடப்பாடி பழனிசாமி மக்கள் மனதில் அதிருப்தியற்ற இடத்தை பிடித்துள்ளார் என்பது நிதர்சனமான உண்மை. மூன்று மாதங்களில் ஆட்சி கவிழும், ஒரு வருடத்தில் ஆட்சி கவிழும் என்று எதிர்கட்சி கூறிய நிலையில் ஆட்சியை வெற்றிகரமாக தேர்தல் காலம் வரை நிறைவு செய்ய உள்ளார்.
தேவையற்ற விமர்சனங்களை புறக்கணிப்பது, முறையான நடவடிக்கை எளிமையான பேச்சு என மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி இடம்பிடித்து வந்தார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சர் இருக்கைக்கு குறிவைத்து காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார்.
அதிமுக-வில் பிளவு ஏற்படும் சூழலை ஓபிஎஸ் உருவாக்கி இருப்பது அனைத்து அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையும ஆட்சியை பிடித்து விடலாம் என அதிமுக தொண்டர்கள் மும்முரம் காட்டி வரும் நேரத்தில் ஓபிஎஸ் செயல் அவர்களது தொண்டர்களையே வெறுப்படையச் செய்துள்ளது என கூறப்படுகிறது.
அதிமுக-விற்கு சாதக அலை ஏற்படத் தொடங்கிய நிலையில் ஓபிஎஸ் பதவி ஆசை வரும் தேர்தலில் அதிமுக வெற்றியை எட்டாக்கனியாக ஆக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் சொர்ப்பமான பகுதிகளில் மட்டுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவு அலைகள் எழுந்து வருகிறது. ஓபிஎஸ் தனக்கும், தன் வாரிசுகளுக்கும் ஆட்சியிலும் கட்சியிலும் செல்வாக்கை அதிகரிக்க செயல்படுகிறார் என கட்சி தொண்டர்கள் கருதத் தொடங்கி விட்டனர்.
முன்னதாகவே அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியை தொடங்கி விட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ் செயல்பாடு அதிமுக தொண்டர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. இருதரப்பினரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எடுத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.