நடிகர் ரஜினியை, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக அவரது ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். 234 தொகுதிகளிலும் போட்டி, ஆட்சி மாற்றம் என 2017ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தெரிவித்து வந்த ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. கொரோனாவுக்கு முன் ஓரளவுக்காவது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த ரஜினி, வைரஸ் தொற்று பரவலுக்கு பின் வெளியில் தலை காட்டாமல் தனித்து இருக்கிறார்.
Check More Tamil Nadu Political News
வயது முதிர்வு, உடல்நல பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், 2021ம் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அவர் கட்சி தொடங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, ரஜினியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பரவியது. ரஜினி கட்சி தொடங்குவது சந்தேகமே என்று பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். அதில், “ என் அறிக்கைபோல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு ரஜினிக்கும் அரசியலுக்கும் இடையிலான இடைவெளியை கூட்டியது. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்து வேகமாக பரவின. இதையடுத்து, ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினர்.
இந்தநிலையில், நடிகர் ரஜினியை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், ரஜினியின் உடல்நலம், அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
ஓ.பி.எஸ்., ஜெ.தீபா ஆகியோருக்கு மறைமுக மற்றும் நேரடி அரசியல் ஆலோசகராக இருந்தவர் குருமூர்த்தி. தர்மயுத்தத்திற்கு பிறகு முதல்வர் பதவி பறிபோனது. தற்போது, அதிகாரமற்ற துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். மறுபுறம், பட்டதெல்லாம் போதும் என்று ஜெ.தீபா அரசியலை விட்டு வெளியேறி ஒதுங்கியுள்ளார். இந்த சூழலில், குருமூர்த்தி பேச்சை கேட்டால், அவங்க நிலைத்தான் ரஜினிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.