தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைவது குறித்து பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் மாநில பொதுத் தேர்தல் என்பதால் திமுகவும், அதிமுகவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே கட்சி தாவல்கள், சீட்டு பங்கீடுகள் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணி ஓரளவுக்கு வலுவாக உள்ள நிலையில், அதிமுக அணியில் இருக்கும் விரிசல்கள் தற்போது பொது வெளியில் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளன. கூட்டணி பேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் கூட்டணி ஆட்சி, தனித்து போட்டி என பாஜகவும், தேமுதிகவும் தனிச்சையாக காய் நகர்த்தி வருகின்றன.

இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “நீட் தேர்வு காரணமாக 13 மாணவர்கள் இறந்ததற்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம். புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது திமுக மற்றும் மன்மோகன் சிங் தான்.
பாஜக தலைமையை மூன்றாவது அணி ஏற்றுகொண்டால் கூட்டணி வைப்பது பற்றி தேர்தலின்போது பரிசீலிக்கப்படும். பாஜகவில் தினந்தோறும் திமுகவினர் இணைந்து வருகின்றனர். திமுகவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் பாஜகவில் இணைவார்கள்” என பேசினார்.
தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. அதுவும், திராவிட கட்சிகள் ஆட்சி கட்டிலில் ஏறியதில் இருந்து தனி பெரும்பான்மை என்ற அந்தஸ்திலேயே இரு கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன. 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், அப்போதும் காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட திமுக வழங்கவில்லை.
2016 தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்தன. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் கூட்டணி காணாமல் போய்விட்டது. பாஜக, பாமக, ரஜினி, கமல் இணைந்து மூன்றாவது அணி உருவாகும் என்று பேசப்படும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.