இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தோனி இல்லாத கிரிக்கெட் என்பது எப்படி இருக்கும், ஆட்டத்தின் முடிவில் இனி சுவாரஸ்யத்தை எதிர்பார்க்க முடியாதே என பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் செமி ஃபைனல் ஆகும். தோனி ஓய்வு அறிவிப்புக்கு பிறகு அவர் களமிறங்கும் ஆட்டமானது ஐபிஎல் தொடராகதான் இருக்கும். தோனி அறிவிப்பை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்து அவர் களமிறங்கும் ஆட்டம் ஐபிஎல் தொடர்தான்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் தமிழர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனியும், சின்ன தல என்ற அழைக்கப்படும் ரெய்னாவும் களமிறங்கும் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி அவர்களது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தோனியின் ஓய்வை அடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளையும், அவரது சிறந்த ஆட்டத்தையும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தோனி ஓய்வு குறித்து டுவட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் தோனி கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளாரே தவிர வேறு எதிலிருந்தும் இல்லை. என்ன தடை வந்தாலும் போராடும் திறன் கொண்ட தோனியின் திறமை பொது வாழ்விற்கு வேண்டும். வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என அந்த டுவிட்டில் பதிவிட்டுள்ளார்.