தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து விதிகளை மீறியதால், காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு வரும் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் மினி சட்டப்பேரவை தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இதனால், பிரச்சாரங்களும் படு தீவரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில், டப்ரா சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் இமர்தி தேவி குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல் நாத் தரக்குறைவாக பேசினார். இமர்தி தேவியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு, ஐட்டம் என்றும் கூறினார்.
இதையடுத்து, கமல் நாத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் கிளம்பின. இதைத்தொடர்ந்து, கமல் நாத்திடம் விளக்கம் கேட்டு, தேசிய மகளிர் ஆணையமும், தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பின.
இந்தநிலையில், தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து விதிகளை மீறிய காரணத்தால், காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து கமல் நாதை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஒரு தொகுதியில் நடைபெறும் பிரச்சாரங்களின் செலவுகளை அந்த தொகுதியின் வேட்பாளரே ஏற்க வேண்டும்.
ஆனால், இது ஒரு கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அவர்களுக்கான செலவை அந்தந்த கட்சிகள் ஏற்கும். கமல் நாத் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களின் செலவுகள் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.