அரசு பொறுப்பு கிடைத்த பிறகு, கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும், பாஜகவின் அரசியல் நகர்வுகள், கூட்டணி ஒப்பந்தங்களில் அமித் ஷாவின் கை ஓங்கியே உள்ளது. இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை திறந்து வைக்கவும், சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார்.
2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தனது அமைச்சகத்திற்கு தொடர்பில்லாத திட்டங்களை திறந்து வைக்க அமித் ஷா வருகை தந்தது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித் ஷா பயணத்தின் மிக முக்கிய அஜெண்டாவாக எதிர்பார்க்கப்பட்டது, ரஜினி உடனான சந்திப்பு.
இதுவரை தமிழகம் வருகை தந்த பெரும்பாலான பாஜக தலைவர்கள், ரஜினியை சந்திக்காமல் சென்றதில்லை. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகம் வந்த அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் கடந்த காலங்களில் ரஜினியை சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக, ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வைத்து, பாஜக 3ம் அணியை அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரஜினிவுடனான சந்திப்பை அனைவரும் எதிர்நோக்கி இருந்தனர்.
ஆனால், ரஜினி தரப்பில், கட்சி தொடங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த காலங்களில் ரஜினியை சந்தித்த போது, துரும்பை போல் இருந்த பாஜக, தற்போது அசூர பலம் பெற்றுள்ளது. இதனால், ரஜினியை தாங்களாகவே நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் பாஜக தலைவர்களுக்கு இல்லை.
இதனிடையே, வேல் யாத்திரை போன்ற விவகாரங்களில் பாஜக – அதிமுக இடையே முரண்பாடுகள் இருந்ததால், கூட்டணி உடையுமோ என்ற சந்தேகம் நிலவி வந்தது. ஆனால், அரசு நிகழ்ச்சியிலேயே, அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ய வைத்து தனது சாணக்கிய தனத்தை அமித் ஷா காட்டினார். அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி இனி வரும் தேர்தல்களிலும் தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க, இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
இதைத்தொடர்ந்து, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பாஜக தரப்பில் 40 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், ஆனால், 25 தொகுதிகள் வரை தருவதாக அதிமுக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில், ரஜினி கட்சி தொடங்கினால் கூட, கூட்டணியில் இடம் கொடுக்க வாய்ப்பு குறைவே.
இதனால், ரஜினிவுடனான சந்திப்பு நிகழவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் விடியவிடிய அமித் ஷா ஆலோசனை நடத்தியபோது, அதிகளவில் ரஜினி பற்றி பேசியதாக சொல்லப்படுவது, குறிப்பிடத்தக்கது.