2021 தேர்தலில் வெற்றிப் பெற்று பாஜக எம்எல்ஏ தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைவது உறுதி இது பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உதிர்த்த வார்த்தைகள். இதை வெறும் வார்த்தைகளாக கடந்துவிட முடியாது.
திராவிடக் கொள்கைகளை கவசமாக போர்த்திக் கொண்டிருக்கும் தமிழகத்தில் காவிக்கொடி தூக்கிக் கொண்டிருக்கும் பாஜக நுழைவது கடினமாகவே இருந்து வருகிறது. முக்கிய சொற்பொழிவுகளை முன்னிருத்தும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழ் வார்த்தைகளை எடுத்துக்காட்டாக கூறுவது, வள்ளுவரை சொந்தம் கொண்டாடுவது போன்ற பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்த பாஜக முயற்சித்தாலும் பிற மாநிலங்களில் எளிதாக நுழைந்தது தமிழகத்தில் நுழைய முடியவில்லை.
தாமரை இந்தியா முழுவதும் மலர்ந்தாலும் தமிழகத்தில் மலர வைக்க வேண்டும் என்பதே பாஜக-வின் முக்கிய நோக்கம். சமீபத்தில் கந்த சஷ்டி கவச விவகாரத்தை கையில் ஏந்திய பாஜக சற்று முன்னோக்கி அடியெடுத்து வைத்தது என்றே கூறலாம். கந்த சஷ்டி விவகாரத்தை இழிவு படுத்தி கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் பதிவேற்றிய வீடியோவுக்கு பிற கட்சிகள் அமைதி காத்தப்போது பாஜக அதை தேர்தல் கவசமாக கையில் எடுத்து முன்னோக்கி சென்றது.
திராவிடக் கட்சியில் பிரதானமாக இருக்கும் திமுகவுக்கும் கருப்பர் கூட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறது என பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்னிருத்தி வருகிறது. அதேபோல் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அமைதியாக இருந்த எல்.முருகன், பிறரின் விமர்சனங்களிலும், மீம்ஸ்களிலும் சிக்காத வகையில் தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து தமிழக மக்கள் மத்தியில் பரீட்சியம் ஆகி வருகிறார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் தொடர்ந்தனூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராகவேந்திர நகரில் வீடு ஒன்றை சிலர் வாங்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குதான் ஆட்கள் குடியேறுகிறார்கள் என நினைத்து நிலையில், திடீரென அந்த வீடு தேவாலயமாக மாறி கிறிஸ்துவ மத பாடல்கள் நாள்தோறும் ஒலிக்கத் தொடங்கியது.

இதையறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அந்த தெரு நெடுவிலும் காவிக் கொடி ஊன்றி கோஷமிடத் தொடங்கினர். தேவாலயம் கட்டி மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்னிருத்திய இந்து முன்னணி அமைப்பினர், அதே தெருவில் பலரது ஒத்துழைப்பு மற்றும் அனுமதியோடு காவிக் கொடி ஊன்ற தொடங்கிவிட்டனர்.
திமுக-வின் கோட்டையாக இருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்தில் தொடர்ந்து காவிக் கொடிகள் உதித்து வருகிறது. காலப்போக்கில் தமிழகத்தில் தாமரை மலருவதற்கு இதுபோன்ற சம்பவமே தண்ணீர் ஊற்றும் விதமாக அமைந்துவிடுமோ என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தின் பிரதான ஆளுமையாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பிறகு சந்திக்க போகும் முதல் தேர்தல் இதுவாகும். தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்வேறு புதிய கட்சிகளும், தமிழக சட்டப்பேரைவக்குள் நுழையவே முடியாத பாஜகவும் இந்த சூழ்நிலையை சாதகமாக்க முயற்சித்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருந்து வருகிறது.