ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13ம் தேதி முதல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,“நானும் ரஜினியும் இன்னுமும் நட்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அரசியலில் அவரது பயணமும் எனது பயணமும் ஒன்றுதான். ஆனால் அவர் கொள்கை என்ன என்று முழுமையாக சொல்லவில்லை. அதனால், அவரது கொள்கையை சொல்லட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றினைய தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.
அரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கடந்த ஓராண்டாகவே கமல்ஹாசன் கூறி வருகிறார். கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்தார். பாஜகவை விமர்சிப்பதில், கமல்ஹாசனுமே இதே கடுமையான நிலைபாட்டைதான் எடுத்து வருகிறார்.
ஆனால், ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதாகவும், பிரதமர் மோடிக்கு நெருக்கமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக அரசின் பல திட்டங்களுக்கு ரஜினி ஆதரவும் தெரிவித்திருக்கிறார். இதனால், நாத்திக சிந்தனையுடன், திராவிட சித்தாந்தத்தை பேசும் கமல்ஹாசன், ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியுடன் எப்படி இணைவார், கமல்ஹாசன் கூறிய ஈகோ என்பது சித்தாந்த கொள்கையா, கொள்கையை விட்டுக்கொடுத்து இருவரும் கூட்டணி அமைப்பார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.