தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர்கள் இறங்கி உள்ளனர். 2021 மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆளும் கட்சியான அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பங்கேற்றனர். அதிமுக தேர்தல் வியூகம், முதலமைச்சர் வேட்பாளர், கட்சிக்கான ஒற்றை தலைமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கேபி முனுசாமி, 11 பேர் கொண்ட குழு அமைத்த அதன் வழிகாட்டுதலின்படி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என தெரிவித்தார். முன்னதாக இதே விவாதம் முன்னெடுத்தபோது கட்சியை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும் வழிநடத்த முடிவெடுத்ததாக கூறப்பட்டது.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அம்மாவின் வாரிசு ஓபிஎஸ், வருங்கால முதலமைச்சர் ஓபிஎஸ் என அவர்களது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.