தமிழகத்தை உலுக்கும் இரண்டெழுத்து சொல்லான நீட் யார் ஆட்சியில் வந்தது, எப்போது அமல்படுத்தப்பட்டது, அது கடந்த வந்த பாதை என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தேசிய அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர ஒரு மாணவர் குறைந்தது 10 முதல் 15 நுழைவு தேர்வுகளை எழுத வேண்டி இருந்தது. இதனால், சிம்ரன், ஜெயின் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், 2010ம் ஆண்டு, மருத்துவ சேர்க்கைக்கு பல தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக ஒரே தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவ சேர்க்கைக்கான நுழைவு தேர்வுகளை ஒழுங்கு படுத்தி, கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் நீட் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதனிடையே, 2013ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட 115 வழக்குகளில், நீட் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டில், 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதன் காரணமாக அந்த வருடம் மே மாதம் நடந்த AIPMT தேர்வு, முதற்கட்ட நீட் தேர்வாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் உட்பட நீட் தேர்வு நடந்த விருப்பமில்லாத மாநிலங்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்க அளிக்குமாறு கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு கோரப்பட்ட நிலையிலும், 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட வருகிறது.
இந்தநிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் கர்ஜித்தார். 2010ம் ஆண்டுதான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள் என்றும், அப்போது காங்கிரஸ் அரசில் திமுக இடம்பெற்றிருந்தது எனவும் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக முப்பெரும் விழாவிவ் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நீட் மரணங்கள் தற்கொலை அல்ல, கொலை என்றும், இதற்கு தமிழக அரசே முழு காரணம் எனவும் ஆவேசமாக பேசினார்.
தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த வரை நீட் தேர்வு நடத்தப்படவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நீட் தேர்வை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கும் பெற்றார். இந்தநிலையில், தேர்தல் நெருங்கும் தருவாயில் நீட் தேர்வை கையில் எடுத்து அரசியல் செய்வதை விடுத்து, இரு பெரும் கட்சிகளும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்டால் மட்டுமே மாணவர்களுக்கு நம்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.