அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியோர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. நீண்ட நாட்கள் நீடித்த இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய நிலமானது ராமர் கோயிலுக்கும், மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை ஒன்று அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது
இதனையடுத்து ராமஜென்ம பூமிக்கான அறக்கட்டளையை மத்திய அரசு நிறுவியது. இதன் பின்னர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மும்மரமாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று கோயிலின் பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.இதனையடுத்து பூமி பூஜையில் கலந்து கொண்ட அவர் 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டினார்.
இதில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல்,, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட 175 பேர் கலந்து கொண்டனர். கொரோனா சூழல் என்பதால் குறைந்த ஆட்களைக் கொண்டே பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய பிரதமர் மோடி, தான் பேசுகையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டினார். அதுமட்டுமின்றி தன்னுடைய பல நாள் கனவு இன்று நிறைவு பெற்றதாகவும் கூறினார்.