பொம்மைகள் உற்பத்தி துறையின் மையமாக இந்தியாவை மாற்ற பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்மார்ட் போன்கள் முதல் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் வரை சீன பொருட்களே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இந்திய பொம்மை சந்தையில் பெரும் பங்கு வகிப்பவை சீன தயாரிப்பு பொருட்கள் தான். வண்ண வண்ண நிறங்களில், புத்தம் புதிய அம்சங்களோடு, மலிவு விலையில் விற்கப்படும் சீன பொம்மைகளுக்கு இந்தியாவில் தனி மவுசு உள்ளது.
ஆனால், அண்மையில் இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக, சீன செயலிகளுக்கு தடை, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் நில பரப்புடன் தொடர்பில் உள்ள அண்டை நாடுகள் முதலீடு செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மான் கி பாத்) வானொலி நிகழ்ச்சியில், பொம்மைகள் தயாரிப்பு குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: ” உலகளவில் 7 லட்சம் கோடி மதிப்பிலான பொம்மைகள் தயாரிப்பு துறையில் இந்தியாவின் பங்கு மிகச் சிறியது. ஆனால், பொம்மைகள் உற்பத்தி துறையின் மையமாக மாற இந்தியாவுக்கு ஆற்றல் உள்ளது. தொழில் முனைவோர் பொம்மை உற்பத்தியில் ஆர்வம் காட்ட வேண்டும்.
தமிழகத்தில் தஞ்சாவூா் தலையாட்டி பொம்மைகள் மிகவும் பிரபலமானவை. இதுபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரியமிக்க பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் உள்ளன. இவற்றை மேம்படுத்தினால், சா்வதேச சந்தையில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும்.
ராஜபாளையம் நாய்கள், சிப்பிப்பாறை நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும். இந்திய இனத்தை சேர்த்த நாய்களுக்கு அதிக வலிமை பெற்றது. இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என்று கூறினார்.