கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்சில் இருந்து ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு இந்தியா பிரான்ஸ் நாட்டு தசால்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு என ரூ.59,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்களாகும். இருப்பினும் இதில் பிற விமானங்களில் இருப்பது போல் அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது. 36 விமானங்களும் 2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 36 விமானங்களும் ஒப்படைக்கப்படும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
36 விமானங்களில் முதற்கட்டமாக 10 விமானங்கள் தயாரான நிலையில் இதை வாங்குவதற்கு கடந்த அக்டோபர் மாதம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார். அங்கு தயார் நிலையில் இருந்த விமானங்களுக்கு பூஜையும் நடத்தினர்.
10 விமானங்கள் தயாராக இருந்த நிலையில் 5 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் பயிற்சிக்கெனவும் மற்ற 5 விமானங்களை இந்தியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பாரிசில் இருந்து புறப்பட்டு 7000 கிலோ மீட்டர் இந்தியாவுக்கு வரும்போது சுமார் 30,000 கிலோமீட்டர் உயரத்தில் நடுவானில் ரபேல் விமானங்களுக்கு எரிபொருட்கள் நிரப்பப்பட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரவேற்பை பெற்றது.
இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த ரபேல் போர் விமானங்களை சுகோய் போர் விமானங்கள் அழைத்து வந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளத்தில் ரபேல் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. ரபேல் விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை விமானப்படை தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.
ரபேல் விமானம் தரையிறங்கும் அம்பாலா பகுதியை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விமானங்கள் இந்தியாவில் களமிறங்கியதை பலரும் பெருமையோடுனான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தேசத்தை பாதுகாப்பதை விட ஆசிர்வாதம் ஏதுமில்லை, தேசத்தை பாதுகாப்பதே சிறந்த செயல், சிறந்த யாகம். மகிமையோடு வானத்தை தொட்ட விமானங்களை வரவேற்பதாக மோடி டுவிட் செய்திருந்தார்.
இதற்கிடையில் ரபேல் போர் விமானம் தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த காங்கிரஸ் கட்சி ரபேல் வருகைக்கு குற்றச்சாட்டு கலந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது. 2012-ல் ரபேல் விமானங்களை அடையாளம் கண்டு வாங்க முயன்ற காங்கிரஸ் கட்சியின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. அதோடு பாஜக 36 ரபேல் விமானங்கள் வாங்கியது. காங்கிரஸ் கட்சியாக இருந்தால் 126 விமானங்களை வாங்கியிருக்கும் எனவும் 108 ரபேல் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்திருக்கும் எனவும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.