ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அடுத்து ஆண்டு பிப்ரவரி மாதமே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து கடந்த மாதம் பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் வலைத்தளப் பக்கத்தில், சசிகாலா பரப்பன அக்ரஹாராத்திலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி விடுதலைச் செய்யப்படலாம். மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள காத்திருக்கவும் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவு குறித்து பெங்களூர் சிறைத் துறை அதிகாரிகள், பொருளாதார பொறுத்தவரை குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது, ஆகையால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தான் ஆச்சாரியின் கருத்து குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், சசிகலா வெளியே வந்தாலும் கட்சியில் இடமில்லை. அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. மேலும் கட்சியில் என்ன அரசியலிலே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியனிடம் இது குறித்து கேட்டப்போது அவர், சசிகலா குறித்து கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார்.
இவ்விரு அமைச்சர்களின் கருத்து தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.