நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தினசரி அடிப்படையில் பாலியல் சம்பவங்கள் குறித்து செய்தித் தாள்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ பார்த்து வருகிறோம். காஷ்மீரில் கொடூரர்களால் கொல்லப்பட்ட ஆசிஃபா பானு தொடங்கி தமிழகம் வரை பல்வேறு கொடூர சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அண்மைக் காலமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகள் பலியாவது அதிகரித்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் தான் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்சேண்டூர் பகுதி கல்விலி இந்திராநகரைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் இன்று அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு விளையாட சென்றிருக்கிறார். வெகு நேரம் ஆகியும் குழந்தையை காணவில்லை என்று பெற்றோரும், உறவினர்களும் தேடி வந்தனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
இதனையடுத்து அச்சிறுமியை தீவிரமாகத் தேடி வந்த போலீஸார் வடலிவிலை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் சேமிப்பு டிரம்மில் குழந்தையின் உடலை மீட்டு எடுத்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமணைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.