கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 274 ரன்கள் அடித்தது. இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் சச்சின் டென்டல்கரின் விக்கெட் இழப்பிற்கு பின் படிப்படியாக சரிந்த இரண்டு முக்கிய விக்கெட்டுகள் ஆட்டத்தை இழந்த விடுவோமோ என்ற சூழலை உருவாக்கியது. இருப்பினும் அதை உடைத்து எரிந்தது தோனி மற்றும் யுவாராஜ்ஜின் கூட்டணி. 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்தது.
இந்நிலையில் இது குறித்து அண்மையில் இலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தநந்தா , “2011 உலகக்கோப்பை போட்டியை வெல்ல வேண்டியது இலங்கை அணி தான். இந்த ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருப்பதை உறுதியாகக் கூறுகிறேன். அப்போது இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சராக நான் இருந்தேன். இது குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன் என்னிடம் அது பற்றிய ஆதாரங்கள் இருக்கிறது. இதில் விளையாட்டு வீரர்களை நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால் இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்டதில் சில குழுக்கள் ஈட்டுப்பட்டிருக்கிறார்கள்”, என்றார். இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
இந்த விவகாரத்தை அலட்சியமாகக் எடுத்துக் கொள்ளாமல் இலங்கை அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணையை மேற்கொண்டது. இது குறித்து இலங்கையைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களிடம் விசாரிக்கப்பட்டது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால் இலங்கை அரசு இந்த விவகாரத்தை கைவிட்டதாக தெரிகிறது. மேலும் இது தொடர்பாக ஜசிசி தரப்பில் ஊழல் தடுப்பு சிறப்பு அதிகாரி அலெக்ஸ் மார்ஷல், ” இந்த விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படாததால் இந்த குற்றச்சாட்டை எடுத்துக் கொள்ள முடியாது”, என்றார்.
முன்னதாக இலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டிற்கு இலங்கை அணி கேப்டன் சங்கக்காரா மற்றும் ஜெயவர்தனேவும் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.